Wednesday, August 1, 2012

நற்கருணை

                ஜூலை 29, 2012 ஞாயிறு மாலை தூத்துக்குடி மாநகரத்தின் வீதிகளில் ஓர் ஊர்வலம். பெருந்திரளான மக்கள் பின்தொடர சற்று அலங்கரிக்கப்பட்ட சிறிய ரக சரக்கு vaaவாகனத்தில் ஆயர் மற்றும் சில குருக்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கதிர் பாத்திரத்தில் வெண்ணிற அப்பத்தினை சகல மரியாதையுடன் எடுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சி ஆண்டுக்கொருமுறை பனிமய அன்னை திருவிழா கொடியேற்றத்தினைத் தொடர்ந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை முக்குத் திருவிழா, பந்தல் ஆசீர்வாதம் என்ற பெயர்களால் அழைக்கப்பெறும் நற்கருணை ஆசீர் வழிபாட்டுக் கொண்டாட்டம். மூன்று பிரதான வீதிகள் சந்திக்கும் இடத்தில் வானளாவிய பந்தலின் கீழ் நற்கருணை தாங்கிய கதிர் பாத்திரம் நிறுவப்படும் பேழை கொண்ட மேடை, நெருக்கடி மிக்க ஜனத்திரள் என வழக்கமாக நாம் காணும் ஓர் நிகழ்வு. ஆனால் இம்முறை நற்கருணை – இறைப்பிரசன்னம் என்ற மேடை முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த தலைப்பு என் சிந்தனையை அதிகமாகவே தூண்டியது.

நற்கருணை என்பது விவிலிய நற்செய்தி நூல்கள் சுட்டும்padiபடி, இறை இயேசு தாம் பாடுபடுவதிற்கு முந்தின நாள் இரவு தம் சீடர்களுடன் பந்தி அமர்ந்திருக்கையில் அப்பம் மற்றும் திராட்சை இரசத்தைக் கையிலேந்தி இறைபுகழ் கூறி தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றினார். ஆதாரம். மத்தேயு 26:26, மாற்கு 14:22, லூக்கா 22:19. ஏன் இதைச் செய்ய வேண்டும்? பூமிப்பந்து சுழலும் மட்டும் தன்னைப் பின்பற்றும் சீடர்கள் தனது நினைவாக தமது சிலுவைப் பலியை அடையாளமுறையில் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதாலும், தாம் நிறுவிய திருச்சபை நாளும் வளர ஜீவ ஆதாரமாய் விளங்கும் என்பதாலும் நற்கருணையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என் துணிவு. கோதுமை மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த பலனளிக்கும். யோவான் 12:24.


நற்கருணை நாதருக்காக அமைக்கப்பட்ட இறைப் பிரசன்னம் நிறைந்த மேடையில் நற்செய்தி முழக்கம்.

அருட்தந்தை, நற்கருணைமேல் முழு பைத்தியமாகவே திரிந்த இறைமனிதர்கள், அவர்கள் வாழ்வில் நற்கருணையின் தாக்கம் என்பதுபற்றியும், இன்றைய கால சூழலில் நற்கருணை எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்ற திருத்தந்தையின் ஆதங்கத்தைப் பற்றியும் தமது மறையுரையில் குறிப்பிட்டார். 

மனுக்குல வரலாற்றில் பல்வேறு போராட்டங்கள், அது அண்டை நாட்டவரின் கையில் அடிமைப்பட்ட நிலையில் தேச விடுதலையாகட்டும், தம் சொந்த மண்ணில் தமக்குரியதை நிலைநாட்ட விழையும் உரிமைப் போராட்டமாகட்டும் அதனை முன்னின்று வழிநடத்தும் தலைவரின் உளமார்ந்த, தன்னலமற்ற பொதுநல சேவையின் பொருட்டு நம்பிக்கையுடன் ஒரு கொடியின் கீழ் அவர் அணியில் இருப்போர் உறுதியில் நிலைத்து போராடி தம் இலட்சியக் கனவை வென்றெடுக்க தீவிரம் கொள்வது எப்போதென்றால் அவர்தம் தலைவர் மறைவுக்குப் பின்புதான். அதுவும் தம் ஒப்பற்ற தலைவர் போராட்டத்தின் மத்தியில் பகைவரால் கொல்லப்பட்டால் அவர்தம் போராளிகள் வெறி கொண்டு எதையும் செய்யத் துணிவர். இதனடிப்படையிலேயே இயேசுபிரான் இம்மண்ணில் இறையாட்சி மலர தம்மையே கல்வாரியில் பலியாக்குகிறார். அவரது சிலுவை மரணம் அவருக்கு உயிர்ப்பின் மாட்சியைத் தந்தது வேறு. அதற்குப் பின் வீறு கொண்ட அவர்தம் சீடர்கள் அவர்தம் போதனையின்படி உலகின் கடையெல்லைவரை சென்று தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது நற்செய்தியை அறிவித்தார்கள். மானுடம் ஈடேற மறைபரப்பு பணிக்காக, இறை இயேசுவின் வாழ்வியல் மதிப்பீடுகளுக்காக அவர்தம் வழியில் தங்களையே கையளித்து மண்ணில் மடிந்து மிகுந்த பலன் தரும் கோதுமை மணிகளாக மாறினார்கள். இன்றளவும் மனுக்குல மீட்புக்காக, அயலாருக்காக தன்னையே பிட்டுத்தரும் யாரும் அவர் பிறப்பால், மனந்திரும்புதலால் கிறித்தவராக அல்லாதவராக, எம்மறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் கிறிஸ்துவின் மறுபிரதி என்றே குறிப்பிடத் தகுதி பெற்றவராகிறார்.

                  நற்கருணைப் பேழையை சகல துதிப் பாடல்கள், இறைவேண்டுதல்களிடையே விசுவாசிகள் மத்தியில் ஆராதனைக்காக ஆயர் உயர்த்திப் பிடித்தபடி நிற்க, கிறித்தவ மறையைச் சாராத மக்கள் உட்பட அனைவரும் வணங்குகின்றனர். ஒரு கணமேனும் அந்தப் பரமனை ஆத்மார்த்தமாக நினைந்து போற்றியவர்கள் இறையவனின் ஆசீரைப் பெற்று மனநிறைவுடன் தம் இல்லம் ஏகினர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ?



 தண்ணீர்மட்டிலான சிறுமியின் தாகம் இறைப்பிரசன்னம் தாங்கும் நற்கருணைமேல் திரும்பும் நாள் எந்நாளோ?

0 comments:

Post a Comment