எங்கள் ஊரில் சமீபத்தில் நடந்த
சம்பவம் அது. கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காரணம் கணவன் குடிகாரன் மனைவியின் பார்வையில், மனைவி நம்பிக்கைத் துரோகி இது கணவன்
குற்றச்சாட்டு. நாம் கேள்விப்பட்டவரையில். அவர்கள் கொலை, தற்கொலை புரிந்ததில் அல்ல
எப்படி 16 ஆண்டுகள் குழந்தையுடன் அந்நரகத்தில் ஒரேவீட்டில் தங்கியிருந்தார்கள்
என்பதுதான் ஆச்சரியம். அவர்களுக்கிடையில் இருந்த நெடுநாள் பூசல் ஆண்டவனுக்கே
வெளிச்சம். எது எப்படியோ துரதிர்ஷ்டமான இந்த நிகழ்ச்சி வேதனையைத் தந்ததுடன் என்
சிந்தனையைத் தூண்டியது. இம்மாதிரி சம்பவங்கள் மனிதகுலத்தின் சாபங்கள். நாம்
பார்வையாளராக மட்டுமே இருந்து இதனைக் கடந்துபோய்விட முடியாது. எல்லோர் வாழ்விலும்
புரிதலில் சிறு சிறு தவறுகள் வரத்தான் செய்கின்றன. அவற்றை அவ்வப்போதே சரிசெய்து
விடுகின்ற ஆர்வம் நம்மிடை இல்லாதபோது அல்லது உடனடித் தீர்வுக்கு நாம்
முக்கியத்துவம் அளிக்காதபோது தம்பதியர் தமது அன்புறவில் ஆழப்படவேண்டிய கட்டத்தில்
அஸ்திவார விரிசல்விழ நாமே காரணிகள் என்பதை உணரத் தவறிவிடுகிறோம்.
நமது மனநிலை பொதுவாகவே இன்பம் மட்டுமே
துய்க்க விரும்புவது. இரவு, பகல் போல இன்பமும், துன்பமும் வாழ்வெனும் நாணயத்தின்
இரு பக்கங்கள். இது இயற்கை நியதி. நாம் விரும்புகிறோமோ இல்லையோ நாம் அனுபவிக்க
வேண்டியவை வந்தே தீரும். எத்துன்பமும் நம்மை ஆட்கொள்கிற நேரத்தில் நமக்கு மட்டும்
ஏன் இப்படி? என்ற விரக்தி மனதில் தோன்றுவது இயல்பு. ஆனால் ஒருவாறு அது நம்மைக்
கடந்துபோகத்தான் போகிறது. சூறாவளியோ, பெரும் புயல் காற்றோ அது வருகிற பாதையில்
இடைப்படுகிற எல்லாவற்றையும் துடைத்தெறிகிறதைப்போல நமக்கு நேரிடுகிற துன்பம் தாம்
வந்ததின் அடையாளமாக உடலிலோ அல்லது மனதிலோ சில வடுக்களை ஏற்படுத்திவிட்டுத்தான் மறையும்.
அதின் அழுத்தம் வேகத்தின் தன்மைக்கேற்றவாறு நீங்காத ரணங்களை ஏற்படுத்திவிட்டுச்
செல்லலாம். நம் வாழ்வில் நாமே காரணிகளாகிவிடுகின்ற, கர்மவினைகளாய் பெற்றெடுக்கின்ற
துன்பங்கள்தான் ஏராளம். இயற்கையாய் அனுமதிப்பதென்பது அரிதாய் சில பாடங்களை நமக்கு கற்றுக்கொடுப்பதாக
அன்றி நம்மை அழித்து விடுவதாக ஆகாது. ஏனெனில் இயற்கை அன்னை அவ்வளவு கொடூரமானவள்
அல்ல. வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப்பார்த்தால் இப்பூமிப்பந்து
நிலநடுக்கங்களையும், பூகம்பங்களையும், வெள்ளப்பெருக்கினையும், சுனாமியையும் சந்தித்தது
பெரும்பாலும் மனிதகுலத்தின் பேராசையினாலே என்பது விளங்கும். இதற்கு சமீபத்திய
சென்னை வெள்ளம் ஓர் சான்று. தண்ணீர் அதன் ஓடுபாதையில் செல்லவேண்டிய
வழித்தடங்களையெல்லாம் மனிதன் தான் தங்குமிடமாக மாற்றியதன் விளைவு இன்று இவ்வளவு
உயிர் மற்றும் பொருட்சேதங்கள என்ற இமாலய உண்மையை ஒத்துக்கொண்டுதான்
ஆகவேண்டியிருக்கிறது. காட்டுவிலங்குகள் கழனிநிலத்தில் கால்பதிக்க யார் காரணம்?
நாம்தானே. அவை உணவுக்கும், தண்ணீருக்கும் கடந்துசெல்லுகின்ற பாதையை நாம்
ஆக்கிரமித்ததின் விளைவுதானே?
கதைக்கு வருவோம். அந்தப் புதிதாய்
திருமணவாழ்வில் இணைந்த தம்பதியில் மனைவி கணவனிடம் ஒருநாள் இப்படிச் சொன்னாள். நாம்
இருவரும் ஒருவர் ஒருவரில் காண்கின்ற, களையவேண்டிய குறைகளை தனித்தனியாக ஒரு தாளில்
எழுதி அதனை உரியவர் வாசித்து அதன்மூலம் நம்மை மாற்ற முயற்சி செய்து நம்
திருமணவாழ்வை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று. அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.
இருவரும் தனித்தனி அறையில் அமர்ந்து கொண்டு ஒருவர் மற்றவரில் கானும் குறைகளை எழுத
ஆரம்பித்தனர். எழுதி முடிந்ததும், மனைவி முதலில் கணவனிடம் தான் அவரில் கண்ட
குறைகளாகத் தான் கண்டதை எழுதிக் கொடுத்தாள். அவை 4 பக்கங்களாக நீண்டிருந்தது.
கணவன் பொறுமையாக அனைத்தையும் வாசித்து முடித்தான். இப்போது கணவன் முறை. அவன் தான்
வைத்திருந்த தாளை மனைவியிடம் கொடுத்தாள். அதனைப் பார்த்தவளுக்கு மிகப்பெரிய
அதிர்ச்சி. அது ஒரு வெற்றுக் காகிதம். உன்னில் ஆயிரம் குறை கண்ட என்மீது நீ ஒரு
குறையும் காணவில்லையா என்ற ரீதியில் அவனை கேள்விக்கனைகளோடுகூடிய விழிகளால்
துளைத்தாள். அப்போது கணவன் சொன்னான். அன்பே எனக்காக எதையும் மாற்றிக் கொள்ள
வேண்டாம். நீ இப்போது இருப்பதைப்போலவே இருந்துவிடு. உன்னை நீயாகவே ஏற்றுக்கொண்டு
அன்புசெய்கிறேன் என்று. மனைவின் கண்ணில் கண்ணீர். அவனிடம் நல்லது ஒன்றையும்
காணாமல் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பார்க்கும் என்னையும் முழுமையாக அப்படியே
ஏற்றுக்கொள்ளும் என் கணவனின் நல்மனம் எங்கே? நான் எங்கே? என்று தன்னையே நொந்து
கொண்டாள்.
இன்னும் வளரும் ...

0 comments:
Post a Comment