Tuesday, March 8, 2016

பெண்மையைப் போற்றுதும்...



தாயாய், உடன்பிறந்த, பிறவாத சகோதரியாய், மகளாய், பிற உறவாய் இம்மண்னில் உலாவரும் யாவருக்கும் மார்ச், 8 மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன். மாதராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க உங்கள் இருப்பை எண்ணி வணங்குகிறேன்.

படைத்தவன், படைப்பில் ஆணோடு நின்றிருந்தால் படைப்பின் தொடக்கம் தொடக்கத்திலேயே நின்றிருக்கும். ஆணுக்கு சரிநிகர் சமானமாய் பெண்ணைப் படைத்ததினால்தால் இந்த உலகம் இன்னும் இயக்கத்திலிருக்கிறது. பெண்ணில்லாத சமூத்தினை கற்பனைசெய்துகூடப் பார்க்க இயலாது. ஆணாதிக்கச் சிந்தை கொண்ட சமுதாயத்தில் பெண்ணை பலவீனமானவள் என்று சித்தரித்த காலங்கள் மலையேறிவிட்டன. எவ்விதத்திலும் ஆணுக்குப் பெண் இளைத்தவள் இல்லை. எந்தத் துறையில் பெண் இல்லை இன்று? என்னைப் பொருத்தவரை பெண்ணை, ஆணோடு போட்டியாய் நினைப்பதே தகாத செயல். பெண்மை இல்லாமல் ஆணால் எந்த ஒரு கட்டத்திலும் முழு மனிதனாக உருவாக முடியாது என்பது என் துணிபு.

ஒரு பெண்ணின் அரவணைப்பில் ஆண் குழந்தையாகிறான். ஆண் தன்னில் பலமானவனாயிருந்தாலும்கூட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சூழ்நிலை இறுக்கத்தினால் அவன் நிலைகுலைந்து போகிறபோது அவனைத் தேற்றி வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள் பெண். படைப்பின் நோக்கம் மாந்தர் பலுகிப்பெருக எனக் கூறப்பட்டிருந்தாலும் பெண் வெறும் பிள்ளை பெற்றுத் தருகிற எந்திரமாய் மட்டும் இருக்கவேண்டும் என்பது இயற்கை நியதியாய் இருந்துவிடவில்லை. மூடநம்பிக்கைகள் நிறைந்த, சமூகக் கட்டுப்பாடுகள் மிகுந்த காலக் கட்டத்திலேயே சாதனைப் பெண்கள் நம் மனித குல வரலாற்றில் வலம் வந்திருக்கிறார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜான்சிராணி இலக்குமிபாய், வீரமங்கை வேலுநாச்சியார் போன்றோர் இன்னும் நம் நினைவுகளில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். தேசவிடுதலைக்காக பாடுபட்ட வீரமங்கையர் வாழ்ந்த என் தாய் திருநாட்டில் இன்றைய அவல நிலை பெண் பகலில்கூட தனியே போய்வரமுடியாத சூழல். பருவமடைந்த பெண் என்றில்லாமல் மழலையைக்கூட பாழ்படுத்திவிடுகின்ற மனித போர்வையில் திரிகின்ற கேடுகெட்ட மிருகங்கள் சுற்றித்திரியும் காடாய் மாறிவிட்டிருக்கிறது என் தேசம். பெண்ணை தெய்வமாக வழிபடுகின்ற மக்கள் மத்தியில் சுற்றுலாவுக்கென இந்திய நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சகோதரிகள் மானபங்கப்படுத்தப்படுவது அவலத்தின் உச்சம். இன்று என் தேசம், பாரத நாடு என்று கொடிபிடிக்கும் அன்பர்களே பெண்கள் தலைநிமிர்ந்து அச்சமின்றி வாழும் நாட்களை நீங்கள் உறுதி செய்ய இயலுமா? வெட்கம். அவமானம். வீட்டில் இருந்தால் தாய், சகோதரி, மனைவி, மகள். தெருவில் இறங்கிநடந்தால் பல ஆண்களுக்கு கண்ணில் படும் பெண் போகப் பொருளா?
ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழலினால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சகோதரிகளுக்கும் உணர்வுகள் உண்டு, ஆன்மா உண்டு. ஆண்களின் காமப்பசிக்கு தன் உடலை இரையாக்கி அதன்மூலம் தன் வயிற்றை நிரப்பவேண்டிய, தம்மை நம்பியிருக்கும் குடும்பத்தினைக் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்போர் அநேகர் உண்டு. இன்று அவர்களையும் தாண்டி குடும்பப் பெண்களையும், வேலைக்குச் செல்லும் மகளிரையும் வக்கிரப் பார்வையால், பேச்சுக்களால் வாட்டுவோர் நம்மிடம் இல்லாமலில்லை.

அண்ணல் காந்தியடிகள் சொன்னார் நடுநிசியிலும் ஒரு பெண் சுதந்திரமாக வீதியில் செல்லமுடிகிறதென்றால் அதுதான் ஒரு நாட்டுக்கு உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியுமென்று. இன்று பெண்கள் நம் நகரின் வீதிகளில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடிகிறதா?

பெண்களே உங்கள் தற்காப்புக்கென ஆயுதமேந்துங்கள். உங்கள் கற்பு பறிபோகும் என்ற சூழலில் ஆதரவுக்கரம் நீட்ட நல்லவர் யாரும் அருகில் இல்லையெனில் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். அதில் தவறேதுமில்லை. சட்டம் பின்னால் தீர்ப்புச் செய்யட்டும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அதற்குரிய அனுமதிக்கப்பட்ட வரையறைகளின்படி. பெண்மை எனும் புனிதம் போற்றப்படட்டும்.

0 comments:

Post a Comment