Monday, May 30, 2016

உயிர்த்த ஆண்டவரைத் தேடி...




              13 மே அன்று என் சகோதரி மகள் - மருமகள் புதுநன்மை திருப்பலிக்காக ஆலயம் சென்றிருந்தேன். மூன்று சுரூபங்களுக்கு மாலை சாற்றும்படி என் தாயார் கேட்டுக்கொண்டதற்கிணங்க குழந்தை இயேசு, சவேரியார் மற்றும் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்த சுரூபங்களுக்கு மாலை வாங்கி ஆலயத்திற்கு வந்து இரு சுரூபங்களுக்கு மாலை போட்டாகிவிட்டது. உயிர்த்த இயேசுவைக் கானோம். அருகில் நின்ற அருட்சகோதரியிடம் கேட்டேன். அப்போது நகைத்தவண்ணம் அவ்வருட்சோதரி என்னிடம் `உயிர்த்த ஆண்டவர், தாம் உயிர்த்த 40ஆம் நாளுக்குப் பின் தம் தந்தையின் வலப்புறம் அமர பரமேறிச் சென்றுவிட்ட்டார். இப்போதுபோய் அவரைத் தேடுகிறீர்களே போஸ்கோ' என்றார். அந்நினைவே அற்றிருந்த எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இந்த சம்பவம் நடந்த அன்று புதுநன்மைத் திருப்பலி மற்றும் மண்டபத்தில் விசேஷம் ஆதலால் நான் ஏனைய காரியங்களில் கொஞ்சம் பிஸி. விசேஷம் முடிந்த சில தினங்களில் ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சி மீண்டும், மீண்டும் என் நினைவுக்கு வர அதனை ஒட்டிய ஏதோ ஒரு செய்தியை அந்த ஆண்டவர் உணர்த்த விரும்புகிறார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது.

                 லூக்கா எழுதின சுவிசேஷம் பிரிவு 24 - 5 `உயிர்த்த இயேசுவைக் கல்லறையில் (இறந்தவரிடையே) தேடுவதேன்?' என விண்தூதர் அவருடைய சீடர்களை வினவியது என் நினைவுக்கு வந்தது. உயிர்த்த இயேசு ஓர் அடையாளம் என எடுத்துக் கொண்டால் நமது கடவுள் தன்மை என்பது மதங்கள், சபை பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அந்த பரம்பொருளை நம்மில் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பது என் துணிபு. கடவுள் தன்மை என்பது கொண்டாட்டம். யாரொருவர் தாம் மகிழ்ச்சியாய் இருப்பதுடன் அவரை அணுகிச்செல்வோரையும் அவர் அனுபவிக்கும் வண்ணமே மகிழ்ச்சியால் நிறைக்க முடியுமோ அவரையே நாம் கடவுள் தன்மை கொண்டவர் எனக் கொள்ள முடியும். நீண்ட தாடி, ஜடா முடி, ஒரு குறிப்பிட்ட நிற ஆடை அணிவது, தொங்கிய முகம் போன்ற அடையாளங்களை நாம் இறையுடைமையாகக் கொள்ள இயலாது.

                 இன்று ஒருவர் கடவுள் தன்மையுடன் இருக்கிறார் என்றால் இறந்தவரிடையே அல்லது நடைபிணங்களுக்கிடையேதான் வாழ வேண்டியிருக்கும். எப்போது ஒரு மனிதன் சுவாசமிருந்தும் இறந்தவனாகிறான்? எப்போது ஒருவர் வாழ்வில் நல்ல விழுமியங்கள் கடைபிடிக்கப்படவில்லையோ அல்லது தன்னலமே அவர் வடிவாகிறதோ அங்கே அவரை முழு மனிதன் என நாம் ஏற்றுக் கொள்ள இயலாது. சூழ்நிலை இறுக்கங்களால் நாம் சில சமயம் நாம் எவ்விடயத்திலும் ஈடுபாடு கொள்ளாது எதிர்மறை எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட ஒருவித தவிப்புடன் இருக்கக் கூடும். மனிதர் எவரும் இதற்கு விதிவிலக்கில்லை. தம்மை ஆன்மீகவாதிகள் எனக் காட்டிக் கொள்ளும் ஒருசிலர்கூட தம் சுய சார்புகளுக்கு பங்கம் வராதபடி வேத வசனங்களைக்கூட தம் எண்ணங்கள், செயல்களுக்குத் தக்க பொருள் கொண்டு அதனையே நியாயப்படுத்தி விவாதிப்பதைப் பலநேரங்களில் நாம் காணலாம். ஆலய வழிபாடுகள், சடங்காச்சாரங்களை முனைப்போடு செய்கிறவர்கள்கூட தம் குறைபாடுகளைக் களைய முன்வருவதில்லை. தடி எடுத்தவர் தண்டல்காரர் என்ற முதுமொழிகேற்ப தம் கையில் வேதநூல் வைத்து ஆயிரம் வேதாந்தம் பேசும் வேதாந்திகள், ஆண்டவன் பணிக்காகவே தாம் அழைக்கப்பட்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்வோர் மட்டில் சாதீய வெறி இல்லையா? உயர்வு, தாழ்வு பிரிவினைகள் இல்லையா? ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் உளப்பாங்கு இல்லையா?  இன்று நாம் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் காணும்/கேள்வியுறும் பெண்மைக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்யும் வக்கிர எண்ணம் கொண்ட கயவர்கள் உலவும் இடுகாடுகளாகத்தானே நம் பெருநகரங்கள் இன்று காட்சி தருகின்றன. இறந்தவர்களாய் இராமல் நாம், நம்மில் காணப்படும் பலவீனங்கள், குறைகளைக் களைந்து அந்த ஆண்டவனைப் பிரதிபலிக்கும் பிம்பங்களாக வாழுவோம். நம் அண்டை, அயலாரையும் வாழ வைப்போம். ஆமென்.

0 comments:

Post a Comment