Thursday, August 4, 2011

நான் எனும் அகந்தை

நான்

ஒரு ஊருல, ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவரு ஒருநாள், பக்கத்து காட்டுல வாழ்ந்து வந்த துறவிய சந்திக்கப் போனாரு. விலை மதிப்பில்லாத பரிசுகளோட வந்த ராஜா, துறவியோட குடிலுக்கு வாசலிலே அவரோட அனுமதிக்காக காத்துக்கிட்டு நின்னாரு. துறவியோ உள்ளேயிருந்துக்கிட்டு `நான் செத்த பிறகு வான்னு சொல்லிட்டாரு. ராஜாவுக்கு ஒரே வருத்தம். நாடாளும் அரசன் நான். இவரு செத்த பிறகு, இவரோட பொணத்த பாத்து நான் என்ன செய்யப் போறேன்னு குழம்பி நின்னுக்கிட்டிருந்தாரு. அப்போ, இதயெல்லாம் அவதானிச்சிக்கிட்டிருந்த மதியூக மந்திரி ராஜாகிட்ட, அரசே! துறவி சொன்னதுல அர்த்தமிருக்கு. அவரு செத்ததுக்கு அப்புறமா உங்கள வரச்சொல்லல. உங்ககிட்ட இருக்கிற `நான்ங்கிற அகந்தய விட்டுட்டு அப்புறமா வரச்சொல்லியிருக்காருன்னு விளக்கிச் சொன்னாராம்.

இந்த `நான் நம்ம படுத்துற பாடு இருக்கே, அதச் சொல்லி மாளாது. இந்த தன் முனனப்பு அதிகமாயிருக்கிற மனஷன் ஆடுற ஆட்டத்தப் பாத்தா தான் மட்டும் என்னவோ 100 வருஷம், அதற்கு மேலயும் இந்தப் பூமிலே இருக்கப் போறதா நினச்ச மாதிரி. அப்பப்பா! இந்த தன் முனனப்பு உணர்வினால சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு. எவன் ஒருத்தன் விழிப்புணர்வோட இந்த `நான்ங்கிற அகங்காரத்த உணர்ந்து கட்டுக்குள்ள வச்சிக்கிறானோ அவனயே நாம் `மகான்னு சொல்றோம். மத்தவங்களப் பத்தின்னா நாம கத கதயாச் சொல்லுவோம். ஆனால், தன்னப்பத்தியே சுய ஆய்வு செய்ய நம்மில் எத்தினி பேருக்கு துணிச்சலிருக்கு? நான் என்ற அகங்கார தன் முன்னப்பு உணர்வு மேலிடும்போது வாயிலிருந்து வருகிற வார்த்தைகள், சமுதாயத்தில் வாழ்கிற சக மனிதர்கள மனக்கசப்புக்குள்ளாக்கிற செய்கைகள்ன்னு என்னென்ன பேசுறோம், செய்றோம். மனுஷ வாழ்வை நிலை குலையச் செய்யும் எண்ணங்கள நமக்குள்ள கொண்டு வந்து மிருகங்களா மாத்தி உலவச் செய்யுற இந்த தீமைய என்னிக்கி நாம விட்டொழிக்கப் போறோம்? மறுபடியும் ஒரு குட்டிக் கதை.

ஒரு விஞ்ஞானி இருந்தாரு. அவருக்கு ஒரு அதீத சக்தி. தான் இறக்கப் போற நாளை முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டாரு. நாள் நெருங்க நெருங்க தான் வாழனும், சாகக்கூடாதுன்னு முடிவெடுத்த அவரு தன்னப் போல 12 விஞ்ஞானிகள தற்போதய குளோனிங் முறைல உருவாக்கிட்டாரு. அவர அழச்சிக்கிட்டு போக வேண்டிய நாள்ல, மரண தூதன் அவருகிட்ட வந்தான். நம்மாள்தான் புத்திசாலியாச்சே. அங்க மொத்தம் 13 பேர் ஒரே மாதிரி இருந்தாங்க. வந்த மரண தூதனுக்கு ஒரே குழப்பம். தப்பான ஆளக் கூட்டிட்டு போயிடக்கூடாதே. ஒரு ஐடியா செஞ்ஞான். அங்கிருந்த விஞ்ஞானிகளப்பாத்து “அறிவியலாளரே, தங்கள் படைப்பில் ஒரு சிறு பிழை இருக்கிறது அப்படின்னு சொன்னதுதான் தாமதம். 13பேர் மத்தில ஒரே ஒருவர் மட்டும் முன்னால எம்பிக் குதிச்சி `எங்கு பிழை கண்டீர் எம் படைப்பில்னு தூதங்கிட்ட சண்டைக்குப் போயிட்டாரு. தன்னுடைய தன் முனனப்பு, நான்ங்கிற அகங்காரத்தினால மாட்டிக்கிட்ட அந்த மனுஷன மரண தூதன் தன் பாசக்கயிற வீசி மேல கூட்டிக்கிட்டு போயிட்டான்.

உளவியலார், இந்த தன் முனைப்ப கட்டுக்குள்ள வச்சிக்க 12 வழிய காட்டியிருக்காங்க. அது இன்னான்னா,

1. தன் முனைப்பு அபாய அளவ எட்டுதான்னு பாத்துக்கனும்.

2. நம்மோட வெற்றி மத்தவங்கள சார்ந்திருக்கின்ற உண்மய புரிஞ்சிக்கனும்.

3. நா இதச் செய்தேன், இதச் சாதிச்சேன்ங்கிற வார்த்தைகள் நம் பேச்சு வழக்கிலிருந்து மறையனும்.

4. அதிகமா பேசுறத விட்டுட்டு கேக்கிறதுக்கு காதுகள விரிய வைப்போம்.

5. எதுலயும் ஒரு சம நிலைத் தன்மையோட இருக்கக் கத்துப்போம்.

6. சரியான கருத்த சந்தர்ப்பம் பார்த்து பகிர்ந்துப்போம்.

7. எந்த நோக்கத்தோட ஒரு கருத்த மிகைப்படுத்திச் சொல்றோம்கிற கவனம் வேணும்.

8. நம்மப் பத்தி நமக்குள்ளே சிரிச்சிக்கிற இயல்பு வரனும்.

9. பிறத்தியாரோட மனக் கஷ்டத்திற்கு நாம் காரணமாயிருந்தா தயங்காம மன்னிப்பு கேப்போம்.

10. பாகுபாடு இல்லாம எல்லாரும் கடவுளோட பிள்ளைங்க, நம் சகோதர, சகோதரிகள்ன்ற உணர்வோட மனுஷாள்கிட்ட பழகுவோம்.

11. வறியவங்களுக்கு மனமிறங்கி உதவுவோம்.

12. தொண்டுள்ளம் கொண்ட தலைவனா/தலைவியா மாறுவோம்.


1 comment: