Friday, August 19, 2011
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?
நித்தியானந்தம் கல்வியறிவற்றவர். முதியவரும் கூட. ஒர் நாள் தம் அருகில் வாழ்ந்து வந்த தம்பதியர் வீட்டிற்கு சென்றார். கணவனும், மனைவியும் சண்டையிட்டு அப்போதுதான் ஒய்ந்திருந்தனர். மெதுவாக அவர்களிடம் பேச்சை ஆரம்பித்த நம் பெருசு நித்தி மனைவி கலாவிடம் `என்னம்மா ஒரே சத்தமா இருந்துச்சே? என்ன பிரர்ச்சினை? வயசுல பெரியவங்கிற முறைல கேக்குறேன். இஷ்டமானா சொல்லு" ன்னாரு. அவர் கேட்டதுதான் தாமதம். அதுக்காகவே காத்துக்கிட்டிருந்த மாதிரி கலா ஓவென அழ ஆரம்பிச்சுட்டா. அவள தேத்துறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சி நம்ம பெருசுக்கு. அழுகைக்கு இடையே கலா பேச ஆரம்பிச்சா.
'உங்களப் பாத்தா எங்க அப்பாவாட்டம் இருக்கு. இந்த அநியாயத்த நீங்களே கேளுங்க. நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாரு. அவரு இஷ்டத்துக்கு எல்லாத்தயும் செய்யுறாரு.இடை மறித்த மதி வாணன் அவள் கணவன் `எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிறா. எது சொன்னாலும், செய்தாலும் குத்தம் கண்டு பிடிச்சு என் நிம்மதிய கெடுக்கிறா'. இப்படி ஆரம்பிச்சி ஒருவர் மாத்தி ஒருவரை குறை சொல்லி மணித்துளிகள் கடந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நித்தி இப்போ பேச ஆரம்பித்தார்.
பிள்ளைகளே! இவ்வளவு நேரமா நீங்க சொன்னத வச்சிப் பார்த்தா ஒருவர் மேல் ஒருவர் எதிர்பார்ப்புகள உங்களுக்குள்ள தேக்கி வச்சிக்கிட்டு அது நிறைவேறாம போறதுனால விரக்தியினால முறையிடுறீங்க. உண்மையிலே உங்க மேல எனக்கு அக்கறையிக்குன்னு நம்புனீங்கன்னா நான் சொல்லப் போறதக் கேளுங்க. ஆர்வத்தில் அவர்கள் இருவர் முகமும் மலர்வதைப் பார்த்து உண்மையான இல்லற மகிழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் அவர்களுடன் தம் உரையாடலைத் தொடர்ந்தார் நம் நித்தி.
நாம சந்தோஷம்னாவே மத்த பொருட்கள, மனுஷங்கள சம்பந்தப்படுத்தி பார்த்தே பழகிட்டோம். ஆனா உண்மையிலே அது அப்படியில்ல. தம்பி, உங்களையோ அல்லது உங்க மனைவியையோ கேட்டா ஏதாவது ஒரு வகையிலே ஒருத்தர ஒருத்தர் தொடர்புபடுத்தி நான் சந்தோஷமாவேயில்லன்னுதான் சொல்லப் போறீங்க. அப்படி இருக்கக் கூடாது. நீங்க ரண்டு பேரும் வெவ்வேறு பிண்னணில பொறந்து வளர்ந்து கல்யாணம் பண்ணிடிருக்கீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஈருடல் ஓருயிரா மாறியிருக்கிற நீங்க ஒரு குறிப்பிட்ட வளையத்துக்குள்ள ஒருத்தர ஒருத்தர் வளச்சிப் போடனும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு. இவ்வளவு நேரம் எதிர்மறையான குத்தங்களயே சுமத்திட்டிருந்த நீங்க நேர்மறையான நல்ல விஷயங்கள நினனச்சிப் பார்க்க விரும்பல.
வேறெங்கயும் போக வேண்டாம். அக்கம் பக்கதிலிருக்கிறவங்களப் பாருங்க. உங்களுக்கு இடது பக்கம் வாழுற குடும்பம் ஒருத்தருகொருவர் விட்டுக் கொடுத்து எவ்வளவு அன்னியோன்யமா புரிஞ்சிக்கிட்டு குடும்பம் நடத்துறாங்க. வர்ர வருமானத்துல அவசியத்துக்கு செலவு பண்ணி, மீதிய சேமிக்கிறாங்க. இது அவங்க சொல்லி நானும் நேரே பார்த்தது. உண்மையான மன மகிழ்ச்சி மன்னிக்கிறதுலயும், தன்னனயும், பிறரயும் அன்பு செய்றதுலயும்தான் அடங்கியிருக்கு. அனுபவ சூழல்கள் ஆயிரமாகட்டும். சின்னதோ, பெரியதோ அன்றாட மாற்றங்கள்னால ஒருவர் மற்றவர் மேல் கொண்ட அன்பு பாதிக்கப்படக்கூடாது. இது மத்த காரணிகள சார்ந்து இருக்கிறதுனாலதான் சமுதாயத்துல சிலர் தம்பதியராயிருந்தும் வெறுமனே நடை பிணங்களா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. இல்ல. இருக்கிறாங்க. மத்தவங்க கண்ணுக்கு தங்கள உயர்வாக் காட்டிக்கிட்டாலும் ஒரு போலியான வாழ்க்கையே நடத்திக்கிட்டிருப்பாங்க. ஒருத்தருக்கொருத்தர் புரிதல் இல்லாமே வீம்பு பண்ணிக்கிட்டு தன் கிட்ட இருக்கிற பணத்த நம்பி மட்டுமே தனி மரமா வாழ்றத நாகரீகமா நினைக்கிற காலம்மா இது. நிபந்தனையற்ற முறைல மன்னிச்சி ஏத்துக்கிட்டு வாழ்றதுக்கு நிஜமாவே பெரிய விஷயந்தான். ஆனா இயற்கையும், நம்ம படச்சவனும் அதத்தான் விரும்புறாங்க. வாழ்வியல் நடைமுறை யதார்த்தங்கள அபபடியே ஏத்துக்கிட்டு ரண்டு பேரும் இனணஞ்சி எதிர்கொண்டு பரஸ்பர அன்பில் நிலைத்திருப்பது இறைமையின் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடிங்கிறத நாம உணரனும்.
எல்லாவற்றையும் தாண்டி என்ன நடந்தாலும் நம்ம நாமே சரி செய்துக்கிட்டு சந்தோஷத்த அனுபவிக்கனும். அதுதாம்மா வாழ்க்கையோட நெறி. சரி உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. நேரமாச்சு. வீட்டுல மக, ம்ரும்கன், பேரப்பிள்ளைங்க எல்லாம் என்ன காணாமே தேடிக்கிட்டிருப்பாங்க. நா வர்றேன்.
கலாவும், மதியும் கண்களில் நீர் மல்க நன்றியுணர்வோட அந்தப் பெரியவர கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிகிட்டு ஒருத்த்ர ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க. அதுல ஆயிரம் அர்த்தங்கள். ஒண்ணு உறுதி. புரிஞ்சிக்கிட்டு வாழ்றதும், வாழாததும் _____________________ கையிலே இருக்கு.
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment