Monday, September 5, 2011
கண்டதும் கொண்டதும்
நேற்று ஞாயிற்றுக்கிழமை. படுக்கையிலிருந்து எழுந்து காலைக் கடன்கள் கழித்து அவசர அவசரமாய்க் கிளம்பினேன் கோவிலுக்கு. கத்தோலிக்க கிறிஸ்தவனுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு கடன் திருநாள் போல. ஏதாவது ஒரு கோவிலில் திருப்பலி பார்த்தாக வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்பதாக சின்ன வயதில் பெரியவர்கள் பயமுறுத்தி வைத்தது. விரும்புகிறோமா, இல்லையோ எதற்காக போகிறோம் என்றே தெரியாமல் வெறுமனே கட்டாயத்திற்காகவோ அல்லது ஏதோ அனிச்சை செயலாகவோ கோவிலுக்குப் போகிறோம். அப்படியே சுய விருப்பத்தோடு போனாலுங்கூட எத்தனை வினாடிகள் உண்மையாகவே அந்த சன்னிதியில் பரமனோடு ஒன்றித்திருக்கிறோம் என்பது கேள்விக்குறியே. உடலை மாம்சம் என்றும், அதை அடக்கி, ஒடுக்கினால் மட்டுமே பேரின்ப வீட்டை அடைய முடியும் என்பது பல ஆன்மீகவாதிகளின் தர்க்கம். ஆனால் திருமூலர்
‘’உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’’
என்று, இந்துக்கள் நம்பும் 'அகம் ப்ரம்மாஸ்மி' (சுயமே பிரம்மம்) என்ற ஆன்மீக நிலைப்பாட்டை வலியுறுத்துகிறார். இதையே ஓஷோ ஊனுடல், ஆன்மா இரண்டையும் கார் மற்றும் அதன் ஒட்டுனருக்கு ஒப்பிடுகிறார். காரோடு டிரைவர் ஒத்துழைத்தால்தான் பயணம் சுமூகமாக இருக்கும், அது ஆன்மீக பயணமாகவே இருக்கட்டும். ஆன்மா என்ற காரோடு, உடலாகிய டிரைவர் ஒத்திசைந்தால்தால் இலக்கை அடைய முடியும் என்கிறார்.
திருப்பலி முடிந்து வீட்டிற்கு வந்து காலை டிபன் முடித்தால் மதிய உணவு கவலை. அசைவம் இல்லையென்றால் அந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமையென்றே கணக்கில் சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. முந்தின நாள் இரவு சரியான தூக்கம் பிடிக்கவில்லையென்றால் புத்தகம், செய்திதாள் எதையாவது வாசிக்க ஆரம்பித்தாலே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறது. பாதி நேர படிப்பு, பாதி நேர தூக்கம் என காலைப் பொழுது கண நேரத்தில் கரைந்து விடுகிறது. மதிய உணவு அதன்பின் ஒரு குட்டித்தூக்கம் என்று நினனத்த மாத்திரத்தில் அழைப்பு, தங்கையைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று. சம்பிரதாய பெண் பார்க்கும் படலம். இதற்கு சில வாரங்களுக்கு முன்பே நகை, சீர் செனத்தி விவகாரங்கள் பேசி முடித்தாகிவிட்டதால் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஒருவர், இருவரென மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்துப் போனார்கள். இவ்வமயம் மாப்பிள்ளை விஜயம். எல்லாரும் அமர்ந்து பேசி சிரித்தபடி சில நிமிட மணித்துளிகள் கடந்தன. பெண்ணிடம் தனியாகப் பேச மாப்பிள்ளைக்கு ஆசை. ந்ம் வீட்டுப் பெண்கள்தான் திருமணம் வரை எந்த ஆணனயும் ஏறிட்டுப் பார்ப்பதில்லையே. பயம் கலந்த கூச்சம். பெண் பேசாததால் மாப்பிள்ளைக்கு சிறிது வருத்தம்தான். இக்குறை தவிர மற்றெல்லாம் சுபமாகவே முடிந்தது.
மதிய உணவுக்குப் பின் தாமதமாக உறங்கச்சென்றால், படுத்த சில நிமிடங்களிலே அலைபேசி சினுங்கியது. பேசி முடித்தால் அப்புறம் எங்கே தூக்கம்? மணி சரியாக மாலை நாலரை. ஏறக்குறைய இரு வாரங்களாக சரியாக வாக்கிங் போகவில்லை. அதை சமம் செய்வதற்கு கடற்கரையோரமாக சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. வண்டியை மாதா கோவிலில் பார்க் செய்து விட்டு தெய்வத்தின் முன் சில வினாடிகள் மெளனத்தில் செலவு செய்துவிட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். விடுமுறை தினம் என்பதால் சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காக்கே ஒரிருவர் ந்டந்தவண்ணமிருந்தனர். கடந்துசென்ற பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமில்லை. உஷ்ணம் அதிகம் இல்லையென்றாலும் கதிரவன் இன்னும் தன் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். வெயில், நிழல் என்று இயற்கை வாழ்வியல் சக்கரத்தை நினனவுபடுத்த, பாதையில் பார்வை பதிந்தவாறே நடையைத் தொடர்ந்தேன்.
மாதா கோவில் திருவிழா முடிந்து மாதமும் ஆகிவிட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னமே வந்து விட்ட நரிக்குறவர் கூட்டம் இன்னும் கோவிலின் அருகிலேயே தங்கியிருந்தனர். இரு பெண்கள் அந்த மாலை வேளையில்தான் சோறு சமைத்துக் கொண்டிருந்தனர். முருகனின் குறவள்ளி காலத்திலிருந்தே இன்னும் நாடோடிகளாக வலம் வரும் இவர்கள் வாழ்க்கைத் தரம் உயர சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்யலாம். இன்னும் சிறிது தூரம் கடந்து போனால் காதல் ஜோடி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. இருவருக்கும் இருபது வயதிற்கு மேலிராது. சினிமா படுத்தும் பாடு. காதலை வியாபாரமாகவே நடத்தும் ஊடகங்கள். காதலிக்காவிட்டால் ஏதோ, பிறவிப்பயன் அடைய முடியாது என்பதாக திரையில் காட்டுவதை யதார்த்தமாகவே நம்பி தம் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர், இளைஞிகள்! என்னைக் கடந்து சென்ற பல வாகனங்கள். அதில் இரண்டு, மூன்று வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் ஏதோ ஒரு ஆர்வத்தில் என்னனத் திரும்பிப் பார்த்தபடி சென்றனர். காரணம் விளங்கவில்லை. ரோச் பூங்காவைத் தாண்டினால் தார்ச் சாலையின் இரு மருங்கிலும் தண்ணீர். மீன் பிடிக்க சிலர் வலைகளை விரித்திருந்தனர். ஓரத்திலிருந்த மின்சாரக் கம்பங்களின் கீழ் நண்பர்கள் நால்வர் அளவளாவிக் கொண்டிருந்தனர். பார்வையைப் பதித்தவாறே நடந்தேன். நீர்ப்பரப்பின்மேல் ஒரிரு வெள்ளை நாரைகள். கண்கவர் காட்சி. ஏதேதோ எண்ணங்களூடே தொடர் நடை.
அது ஐந்து கிலோ மீட்டர் நீள சாலை. முடிவில் இரயில் பாதை. அதை நெருங்கும் நேரத்திற்கு ச்ற்று முன்னர்தான் சரக்கு இரயில் ஒன்று கடந்து சென்றிருந்தது. அந்த லெவல் க்ராசிங் தான் நான் திரும்ப வேண்டிய இடம். திரும்பும் தருணத்தில் ஒர் அலைபேசி அழைப்பு. அதில்....
Labels:
கண்டதும் கொண்டதும்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment