Friday, June 3, 2016

கனவே கலைகிறதே...


நான் சமீபத்தில் அலுவலகம் வருகிற வழியில் சந்தித்தது. இடை  குறுக்கிடும் இருப்புப்பாதை வளைவில் ஓர் இளம்ஜோடி மற்றும் அவர்களை பல்வேறு கோணங்களில் நிழற்படம் எடுத்த புகைப்பட கலைஞரையும் கண்டேன். என் நினைவலைகள் என்னை சிறிது பின்னோக்கி அழைத்துச் சென்றன. கணவராக வரப்போகிறவருக்கு, தனக்கு வாய்க்கும் மனைவி ஓர் திரைமங்கையாகவும், தான் மனைவியாகப் போகிறவரை ஓர் திரை கதாநாயகனாகவும் கற்பனையில் உருவகித்து புளகாங்கிதம் அடைவது இயல்பு. அவரவருக்கு ஆயிரம் கனவுகள். திருமணம் உறுதி செய்யப்பட்டவுடன் தனக்கு மனைவியாக வரப்போகிறவருக்கு அலைபேசி வாங்கி பரிசளிப்பதுதான், திருமண நாள் அன்று வரை மணிக்கணக்காக ஆயிரம் கதைகள் பேசுவர். அதுவும் முகம் பார்க்க முடியாத அலைபேசி என்றால் நேரம் போவதே தெரியாதபடி கதைப்பர். மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும். தம்மவ(ள்)ர் முகம் அவரவர் கற்பனையில் எழில்ரூபமாய் காட்சியளிக்கும். தொலைபேசியிலோ அல்லது அலைபேசியிலோ முன் தயாரிப்பு எதுவுமின்றி மணிக்கணக்கில் அளவளாவ ஏதுவாக நிறைய விஷயங்கள் இருக்கும். பரிமாறிக் கொள்ளும் தரவுகள்கூட அவர் தொடர்புடைய துறையாக இருக்கும் என்பதில்லை.

திருமணநாள் முந்தைய இரவு. பெரும்பாலான இடங்களில் சமூக நிகழ்ச்சியாக மணமக்கள் உறுதி செய்வது அல்லது நிச்சயதார்த்தம் என்ற சடங்கு கொண்டாடப் பெறும். இப்போதெல்லாம் திருமண நிகழ்விற்குப் பின் நடக்க வேண்டியவை கூட அதாவது மணமக்களாக இணைந்தே நிழற்படம், காணொளிக் காட்சிகள் என அமர்க்களப்படுகின்றன. எனது நண்பர் ஒருவருக்குப் பெண் பார்க்கும் படலம். நானும் அவருடன் சென்றிருந்தேன் அவர்தம் பெற்றோர் விருப்பப்படி. இதற்கு முன்னரே அப்பெண் பற்றி உறவினர் யாவரும் அழகி, நடிகை திரிஷா மாதிரி என வருணிக்க இவர் தன் மனதிலே திரிஷாவையே மணம் முடிக்கின்ற ஒருவித மனமயக்கத்தில் இருந்தார். மணம்புரிய வேண்டிய இருவரும் ஒருவையொருவர் பார்த்தாகி விட்டது. நம் கலாச்சாரத்தில் ஒருவரொருவர் தனியே சந்தித்து பேசும் வழக்கம் கிடையாது. அதற்கு பெரியவர்கள் அனுமதிப்பதும் இல்லை. திருமண நாள் முடிவாயிற்று. திருமணத்திற்கு முந்தைய நாள் நிழற்படம் எடுப்பவர் மணமக்கள் இருவரையும் வெளியே அழைத்துக் கொண்டுபோய் அந்நகரில் அமைந்திருந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு அழைத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் அளவிற்கு பல்வேறு கோணங்களில் அதாவது நாயகி தன் துப்பட்டாவினைப் பறக்கவிட்டபடி ஓடிவருவதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. திருமணம் முடிந்து இப்போது ஏறக்குறைய 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இப்போது ............... நடப்பவை எல்லாம் நேயர்கள் கற்பனை வளத்திற்கே விட்டுவிடுகின்றேன்.

அவரவர் தம் வாழ்வில் திருமண நாள் தொடங்கி, குழந்தைச் செல்வங்கள் பெற்று சில, பல வருடங்களைக் கடந்த காலங்களை நினைவலைகளில் இருத்தி அசைபோட அழைக்கிறேன். எழுதுவோனும் மணவாழ்க்கை சம்பவங்களுக்கு விதிவிலக்கு அல்லேன்.

பொதுவாக திருமணம் எனும் நிகழ்வு நம் சமூகத்தில் ஒரு புனிதமான கொண்டாட்டமாகக் கருதப்பெறுகிறது. நண்பர், உறவு வட்டங்களை அழைத்து விருந்து பரிமாறி, பெரியவர் ஆசீர்வதிக்க, தேனிலவு, மறுவீடு என ஏனைய சுபமங்கல நிகழ்ச்சிகளைத் தாண்டி தன் உடன்பிறந்தோர், நெருங்கிய உறவுகள் இல்லங்களுக்கெல்லாம் அவர்கள் அழைக்க விருந்து உண்டு களிப்புற்று, தம் இல்லாள் சீமந்தம் காண, பிள்ளைப்பேறு கொண்டு ஆண்டொன்று ஆகிவிட்டால்... இடைக்காலத்திலோ அல்லது அதன்பின்பாகவோ, தாம் வளர்ந்த பிண்ணனி தாண்டி ஒருவர் மற்றவருக்காக வளைந்து கொடுக்க, கணவன் மற்றும் புகுந்த வீட்டாரை அணுசரனையாக அணைத்துச் செல்லவேண்டிய பெண் அல்லது ஆண் பல உணர்ச்சிப் பிரர்ச்சினைகளை சந்த்திக்க வேண்டியிருக்கிறது. இதுதவிர பொருளாதாரப் போராட்டங்கள் தனி. இச்சூழலில் மாதசம்பளம் வாங்கிய பத்து நாட்கள் கணவன், மனைவியிடையே அப்படி ஒரு புரிதல், அங்கே பெரும்பாலும் இருவருக்குமே கேட்டது கிடைத்து விடுகிறது. கையில் இருப்பது கரைந்தவுடனே எதற்கெடுத்தாலும் பிரர்ச்சினை. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் என்னவாயிற்று? மணமக்கள் வாழ்வின் மகிழ்ச்சி ஏன் குலைகிறது?

இயல்பில் அன்பு ஒன்றே அடிப்படை என்றால் அந்த பழைய உணர்வுகள் அதாவது மணம் முடிவானநாள் தொட்டு, இரவு, பகல் பாராது மனத்தில் நினைந்து, நினைந்து பூரித்துப் போன, தாம் கற்பனை செய்து அழகு பார்த்த அந்த உருவம் எங்கே போயிற்று? அப்போது அவ(ர்)ள் பெயரை உச்சரித்தவுடனே மனத்தினில் சுற்றி, சுற்றி வட்டமடித்த பட்டாம்பூச்சிகள் பாதை மாறிப் பயணித்துவிட்டனவா? கல்யாணம் முடித்த அன்பரே, சோதரன், சோதரிமாரே, தோழர், தோழியரே உங்கள் அனுபவங்களைப் பகிரவேண்டம். கால எந்திரத்தில் பின்னோக்கிச் சென்று நடந்த அனைத்தையும், நினைவில் நிற்கும் யாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து நகைப்பீர்களோ அல்லது உள்ளுக்குள் அழுவீர்களோ யானறியேன். எது எப்படியோ மறுவுலகப் பிரவேசம்வரை காத்திராமல் இப்புவியில் வாழும் வரை, நம் கருவறை முதல் கல்லறைவரையிலான காலம் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடையன்றி வேறில்லை என்பதைப் புரிந்துகொண்டால் எச்சூழலிலும் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்ற இயற்கை ஆசானின் பாடம் நம் வாழ்வில் நிதர்சனமாகிவிடும் என்பது வரலாற்று சத்தியம்.  

0 comments:

Post a Comment