Monday, June 6, 2016

தியானம் - யோகம்

     அன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அது மாயா ஜாலம் சம்பந்த்தப்பட்டது. அதில் நிகழ்ச்சி நடத்தியவர் ஒரு  மாயாஜால நிபுணர். அவர் தான் கேள்விப்பட்ட ஒரு துறவியை சந்திக்க விரும்பி அந்த நேபாள நாட்டு தெருக்களிடையே தேடி அலைந்து கொண்டிருக்கிறார். தான் வழியில் எதிர்ப்படும் நபர்களிடத்தில் எல்லாம் விசாரித்துக் கொண்டே சென்றார். போகும்வழியில் சிற்சில மாயாஜாலங்களை செய்து காட்டி  பார்போரையெல்லாம் வியப்புக்குள்ளாக்கினார். இறுதியில் மதகுரு ஒருவரின் துணையோடு இமய மலையின் உச்சியில் உள்ள ஒரு  ஆசிரமத்தில் அந்த துறவியை சந்திக்கிறார். அவரிடம் தன் அபிலாசையைத தெரிவிக்கிறார், தான் அவரை சந்திக்க வெகு தொலைவிலிருந்து வந்திருப்பதாகவும் அவரிடம் உள்ள அபூர்வ சக்தியை நேரில் காண விரும்புவதாகவும். முதலில் மறுப்பு தெரிவித்த அந்தத் துறவியும் இறுதியில் சம்மதித்து அவரை சிறிது தூரம் தள்ளி நின்று பார்க்க சொல்லிவிட்டு தியானத்தில் அமர்கிறார். கையில் இருந்த ஜெபமாலையை உருட்டியபடி சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார். என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திற்குள்ளாக தரையிலிருந்து 2 - 3 அடிகள் உயர்ந்து அந்தரத்தில் மிதக்கிறார். உண்மையில் அந்த நிகழ்ச்சி என்னை நெகிழச்  செய்தது.  இதே நிகழ்ச்சியை நான் இரண்டாம் முறை பார்த்தாலும்கூட அது என் மனதில் தனிப்பட்ட இடத்தினைப் பிடித்திருந்தது முற்றிலும் உண்மை. தியானத்தின்மேல் அடியேனுக்கு இருந்த ஈடுபாட்டினால் இருக்கலாம்.



             எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் உறவினர் ஒருவரை வழியனுப்ப இரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அவரை இருக்கையில் அமரவைத்து விட்டு நான் எதிரே இருந்த நடைபாதை இருக்கையில் அமர்ந்திருந்தேன். நான் அந்த நாட்களில் ரஜனிஷ் (ஓஷோ) அவர்களின் மனம், யோகம், தியானம் சம்பந்தப்பட்ட நூல்களை அடிக்கடி படித்துக் கொண்டிருந்த தருணம். அதில் ஒருபகுதி அவர் அறிவுறுத்தலின்படி என் சுவாச பாதையை தியானித்தபடி, உள்ளூர  என்னையே சாட்சியாய் கவனித்தபடி அமர்ந்திருந்தேன்.  . எவ்வளவு நேரம் அப்படி இருந்தேன் என்பது நினைவில்லை. ஆனால் நான் அந்நிலையில் அமர்ந்திருந்ததை பெரியவர் ஒருவர் இரயில் பெட்டியில் இருந்தபடி கவனித்திருக்கிறார். நான் என்னைச் சுற்றி நடப்பது எதையும் கருத்தில் கொள்ளாதபடி மோன நிலையில் இருந்திருக்க வேண்டும்.

         தியானம் என்பது தவ யோகிகளுக்கு மட்டுமே உரியது என்றும் அப்படி கடுந்தவம், தியானம் மேற்கொள்ள வேண்டிய இடம் மனித சஞ்சாரமற்ற அடர்ந்த காடு, இமயமலை என்ற கருத்தியல் இக்கால சூழலில் பொருந்தாத ஒன்று. யோகத்தில் நிலைத்திருக்க, தியானம் மேற்கொள்ள வனாந்திரங்களுக்குத்தான் போகவேண்டும் என்றிருந்தால் நம்மைப் போன்ற சாமானியர்கள் லௌவீகக் கடமைகளை மறந்துவிட்டுத்தான் செல்லவேண்டும். இது ஏற்புடையது ஆகாது. நமது ஒவ்வொரு செய்கையும் தியானமாக மாற முடியும். இரட்டைத் தன்மை இல்லாத எந்த ஒரு பேச்சும், செயலும் நம்மை யோகத்தில் ஒருபடி உயர்த்தவே செய்யும்.

         ஆகவே நாம் ஏதோ ஆள், அரவற்ற பகுதியில், மலையில், அறையின் மூலையில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. நமது ஒவ்வொரு செய்கையும் மனம் ஒன்றிய தியானத்தின் ஓர் அங்கமாக இருக்கமுடியும் என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு அதிகதிகமாக தியானத்தில் ஈடுபடுவோம். மெய் தியானத்தின் மேன்மையால் நமக்கு புதிய வாசல்கள் திறக்கும்.

         

0 comments:

Post a Comment