Thursday, July 14, 2016

எதற்காக தயார் செய்கிறோம்?

                         அவர் இராணுவத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவர். அவர் பணிக்காலத்தில் ஓர் நாள் போரில் காயமடைந்த வீரனை அவரிடம் சிகிச்சைக்காக கொண்டு வந்தார்கள். அவர் உடலெங்கும் ரணங்கள். வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இரத்தமும் அவர் உடலில் இருந்து அதிகமாய் வெளியேறிக் கொண்டிருந்தது. நம் மருத்துவர் அல்லும், பகலும் தீவிர சிகிச்சையளித்ததின் பலன் அவ்வீரர் பிழைத்துக் கொண்டார். இவருக்கோ ஆத்ம திருப்தி தம்மால் ஓர்  உயிர் காப்பாற்றப்பட்டதில். நாட்கள் சென்றன. மருத்துவரும் தம் பணியினை செவ்வனே தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வந்தார். பிறிதொரு நாளில், தாம் உயிருக்குப் போராடிய நிலையில் தம்மிடம் வந்த, தாம் சிகிச்சையளித்த வீரர் போர்முனையில் இறந்துபட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது. இவரோ மனம் உடைந்தார். அப்போது அவர் மனதில் ஓர் உண்மை உரைத்தது. தாம் சிகிச்சையளித்தது உயிரைக் காப்பாற்ற அல்ல மாறாக அவ்வீரரைப் பொறுத்தமட்டில் அவரை சாவுக்குத் தயார் செய்ய என்று. இதனை நினைந்த மாத்திரத்தில் அவர் மனம் சஞ்சலம் கொண்டது. தமது மருத்துவப் பணி, நோக்கத்தின்படி உயிர் காக்க இல்லையென்றால் இனி அந்தப் பணி தனக்கு வேண்டாம் என்று முடிவுசெய்தவராய் தம் சொந்த கிராமத்திற்கு சென்றார் தம் வாழ்நாளின் எஞ்சிய நாட்களைக் கழிப்பதற்கு.

                 தம் கிராமத்தில், வீட்டுத் தோட்டத்தில் ஓர் நாள் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவராக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது பால்ய சிநேகிதர் ஒருவர் அவரை சந்திக்க வருவதுகண்டு வரவேற்றார். பல்வேறு விஷயங்களைப் பற்றி வெகுநேரம் அளவளாவிய அவர் நண்பர் மருத்துவரிடம் அவர் பணியினைப் பற்றியும் கேட்டார். நம் மருத்துவர் நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்லி, தான் இப்போது அந்த மருத்துவப் பணியினைத் தவிர்ப்பதையும் தெரிவித்தார். கீதோபதேசத்தில் கண்ணன், அர்ஜூனனிடம் போர்முனையில் தமக்கு எதிராய் அணிவகுத்து நின்ற கெளரவரை ஆயுதம் கொண்டு அழிக்க பணிக்கிறான். கெளரவர் அனைவரும் தம் இரத்த உறவுகள். எப்படி மனம் வரும் அவர்களைக் கொல்வதற்கு? பகை இடையில்தான். சிறுவம் முதலே ஒரே அரண்மனையில் ஓடி விளையாடி, உறங்கும் நேரம் தவிர இணைந்தே வாழ்ந்த உறவினரையா கருவறுப்பது? அவனுக்கு தாம் ஒன்றாய்ப் பழகிய, செலவழித்த நேரங்கள் மனத்திரையில் காட்சிகளாய் விரிய வேதனைப்படுகிறான். அப்போது கண்ணன் சொல்வான். `நீ இப்போது உன் கண்ணால் பார்க்கும் உன் உறவினரின் உடல் அழியக்கூடியது. ஆனால் ஆன்மாவின் பிம்பமான அவர்கள் என்றுமே அழிவதில்லை. அவர்களின் உடல் வீழ்ந்துபோனாலும் அவர்கள் ஆன்மாவிற்கு அழிவென்பதே இல்லை. அதனால் நீ கெளரவருக்கெதிராக போரிடுவது தவறில்லை.' இந்த கூற்றின் அடிப்படையில் அந்த நண்பரும் தம் மருத்துவரிடம் `நாம் நம் கடமையினை ஆற்றுகிறோம். அவ்வளவே. அதன் விளைவு, பலன் நம்மைச் சார்ந்தது அல்ல. மானிடர் எவருமே அழிவுக்குரியவர்கள். இன்றோ அல்லது நாளையோ அவர்கள் இம்மண்ணைவிட்டு மறைவர். இன்று ஒருவர் உயிர்நீத்தாரென்றால் நாம் நாளை. அதனால் உங்கள் பணியைத் தொடருங்கள்.' மனக்குழப்பம் தீர்ந்தவராய் நம் மருத்துவர் தம் பணியினைத் தொடர்ந்தார்.

      நாம்கூட எதற்கெல்லாமோ தயார் செய்கிறோம் எதற்கென்று தெரியாமலே. நம் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம் ஒரு நல்ல எதிர்காலத்திற்காக. பணம் சம்பாதிக்க, சொகுசான, வசதியான வாழ்க்கைக்காக. ஆனால் ஒரு நல்ல மனிதனாக, மக்களாக சமூகத்தில் பிறரன்போடு ஒழுகத் தேவையான நல்ல மதிப்பீடுகளை நாம் சொல்லித் தருவதில்லை. அதைவிட மேலாக, நாம் அம்மதிப்பீடுகளின்படி நடந்து கொள்வதில்லை. குழந்தைகள் நாம் போதிப்பதைவிட அவர்கண்முன் நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்கள் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல் நம் செயல்களைப் பிரதியெடுக்கிறார்கள். இதனைத்தான் ஓர் தமிழ் திரைப்பட பாடல் `எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்று குழந்தை வளர்ப்பை வலியுறுத்தியது. இவ்வுலகில், உண்மையான மகிழ்ச்சி என்பது நுகரும் பொருட்களில் அல்ல என்பதை நம் குழந்தைச் செல்வங்கள் அறிந்து அதற்கேற்ப வாழ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

















0 comments:

Post a Comment