Saturday, August 27, 2011

மனம் - திருப்தி



அரசவை வாயிலில் ஒரு நாள் கந்தல் துணியணிந்து பிட்சை கேட்டு வறியவர் ஒருவர் வந்து நின்றார். வாயிற்காவலர்கள் ஏதோ கையிலிருந்ததைக் கொடுத்து அவரை அங்கிருந்து விரட்டி விட முயன்றனர். வந்திருந்தவரோ `நான் அடிமைகளிடம் தருமம் வாங்குவதில்லை. தருவதென்றால் உங்கள் அரசன் தரட்டும்' என்று பிடிவாதமாக அங்கு நின்று கொண்டிருந்தார். நீண்ட நேர தர்க்கத்திற்குப் பின் வீரர்கள் அரண்மனைக்குள் சென்று அரசனிடம் நடந்ததை அறிவித்தார்கள். அரசனுக்கு ஆச்சரியம். தருமம் வாங்க வந்த பிட்சைக் காரனிடத்திலும் கொள்கைப் பிடிப்பா? வரச்சொல் அரசவைக்கு என்று வந்த தன் வீரனிடம் கட்டளையிட்டான்.

அரசன் முன் கொண்டு வரப்பட்ட அந்த வறியவர் ஏழ்மைக் கோலத்தில் இருந்தார். அவரைப் பார்த்தால் பல நாள் பட்டினி என்பது தெரிந்தது. ஆனால் சாது போன்ற அவர் முகத்தில் அரசன் போன்ற வசீகரம் தெரிந்தது. அரசன் அவரிடம் உனக்கு என்ன வேண்டும்? எனக் கேட்டான். `என் கையிலிருக்கும் இந்தப் பாத்திரம் நிரம்ப வேண்டும். நீ எதைக் கொண்டு வேண்டுமானாலும் அதை நிரப்பலாம்' என்றார் வந்தவர். இது என்ன பிரமாதம் என்று கூறி திருவோடு போன்றிருந்த அந்த பிட்சைப் பாத்திரத்தை உணவால் நிரப்புங்கள் என்று கட்டளையிட்டான் அரசன். சிறிது, சிறிதாக இருந்த உணவு பதார்த்தங்கள் எல்லாவற்றையும் போட்டாகி விட்டது. பாத்திரம் நிரம்பவில்லை. வியப்பு மேலிட்டவனாய் தன் அலுவலர்களிடம் கஜானாவிலிருக்கும் பொற்காசுகளைக் கொண்டு வந்து போடுங்கள். போட்டாகி விட்டது. பாத்திரம் நிரம்பவில்லை. அரசனுக்கு இப்போது கெளவரவ பிரர்ச்சினை ஆகிவிட்டது. என் கருவூலங்களிலிருந்து மாணிக்கம், வைர, வைடூரியங்களைக் கொண்டு வந்து இந்தப் பாத்திரத்தில் கொட்டுங்கள். எப்படியும் இது நிரம்பியாக வேண்டும் என்று கத்தினான். அவன் சொன்னபடி செய்தாகி விட்டது. அப்போதும் அது காலியாகவே இருந்தது. உள்ளே போடுவதெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருந்தது. இருந்த எல்லாம் தீர்ந்தது. இப்போது அரசனே பிட்சைக்காரனாகும் நிலை. அரியனணயிலிருந்து எழுந்து அந்த சாது காலில் போய் விழுந்தான் அரசன். ஐயா! இது என்ன? மாயம்போல் உள்ளதே. எதை, எவ்வளவு கொண்டு வந்து போட்டாலும் இந்த பிட்சைப் பாத்திரம் நிரம்பவில்லையே. ஏன்? தாங்கள்தான் கூற வேண்டும்.' என்று வேண்டி நின்றான்.

இதையெல்லாம் இவ்வளவு நேரம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த சாது பலமாகச் சிரித்தபடி அரசனிடம் `மாயம் ஒன்றுமில்லை. இந்த பாத்திரம் மனித மனத்தினால் உருவாக்கப்பட்டது' என்றார். இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் ஒரு மிகப்பெரிய உண்மையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. மனத்தின் ஆசை அளவறியாதது. எல்லை என்பதே அதற்கு இல்லை. சீக்கிரத்தில் திருப்தி அடையாது. மனத்தினைப் பயன்படுத்த ஆரம்பித்தால் மிஞ்சப் போவது வேதனையும், விரக்தியுமே.

0 comments:

Post a Comment